தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

மாதர் குல மாணிக்கம் அன்னை தெரேசா !

mothertheresa



அன்னை என்ற வார்த்தைக்கு விளக்கம் தருவது அவசியமற்றதல்லவா? இந்த அன்னை என்ற வார்த்தை தன்னை அழகுபடுத்திக் கொள்ளும் போது அந்த வார்த்தைக்கு இன்னும் வனப்பு அதிமாகிறது.

இந்த அன்னை என்ற வார்த்தை சிலரின் வாழ்க்கைக்கு அடைமொழியாய் நிற்கும்போது அதற்கு அழகு கூடுகிறது. மெசடோனியா நாட்டில் எங்கோ ஒரு மூலையில் அல்பேனிய இனத்தில் பிறந்த ஆக்னஸ், பின்னாளில் தெரேசாவாக உருவெடுத்தபோது அவருக்கு இந்த அன்னை என்ற அடைமொழி அழகாய் பொருந்தி நின்றது. அன்னை தெரேசா என்று உச்சரிக்கும்போதே சாந்தமே உருவான ஒரு கருணை பொங்கிய முகம் நம் மனக்கண் முன்னால் ஒரு நொடி நிழலாடிச் செல்வது உண்டல்லவா?

மிகவும் சாதாரண குடும்பத்தில் பிறந்த ஆக்னஸின் தந்தை ஒரு பிஸினஸ்மேன். அகா, லாஸர், ஆக்னஸ் என்ற மூன்று முத்தான குழந்தைகளைக் கொண்ட அந்த சிறிய குடும்பத்திற்கு பேரிடியாய் வந்து சேர்ந்தது தந்தையின் மரணம்.

ஆக்னஸ்க்கு 9 வயது ஆகியிருந்த போது ஏற்பட்ட இந்த திடீர் இழப்பினால் குடும்பம் தடுமாறியது. ஆக்னாஸின் தாய் டிரானா சின்னச் சின்ன தையல் வேலைகள் செய்து தனது குழந்தைகளை வளர்த்தாள். தங்களைத் தேடி வரும் ஏழைகளுக்கு இயன்ற உதவியை அளித்து வந்தாள் டிரானா.

தங்களது அண்டை வீட்டில் இருந்த ஒரு பெண் மதுபானங்களின் பிடியில் சிக்கி சீரழிந்து கிடந்ததை கண்டு வருத்தமுற்றாள் டிரானா. நேரம் கிடைக்கும் போது அவள் இருப்பிடம் சென்று தேவையான சேவைகளைச் செய்து வந்தாள்.

டிரானாவினால் செய்ய முடியாத நாட்களில் அந்த பணியை ஆக்னஸ் சென்று செய்து வந்தாள்.

பின்னாளில் ஒரு சேவை ஸ்தாபனத்தை உருவாக்க அந்த அனுபவம் அவருக்கு ஒரு தூண்டுகோலாய் இருந்தது என்றே சொல்ல வேண்டும்.

கல்கத்தாவிற்கு மேல்படிப்புக்கு வந்த ஆக்னஸ், அங்கிருந்த ஏழைகளுக்கும், நோயாளிகளுக்கும் தொண்டு புரியத் தொடங்கினாள். நல்ல உள்ளங்களின் உதவி, கர்த்தரின் ஆசி, கடுமையான பலன் எதிர்பாரா உழைப்பு இவையனைத்தும் "மிஷினரீஸ் ஆப் சாரிட்டிஸ்" என்ற மிகப்பெரிய ஸ்தாபனத்தை தொடங்க வழிவகுத்தது.

1979 ல் அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவர் மேடைகளில், பல இடங்களில் ஆதரவற்றவர்களுக்காகவும், அனாதைகளுக்காகவும், பேசி வந்துள்ளார். அவரது பேச்சுத் தொகுப்பிலிருந்து ஒரு சிறிய பகுதி இதோ. . .

"அன்பு செலுத்துவது உங்களது இல்லத்தின் நான்கு சுவர்களுக்குள்தான் முதலில் ஆரம்பிக்கிறது. இது மறுக்க முடியாத உண்மை. உனது சகோதர, சகோதரிகளோடு அன்பு பாராட்ட முடியாத நீ, எங்கோ இருப்பவருக்கு உன் வார்த்தைகள் மூலம் மட்டும் அன்பைத் தெரிவிக்க நினைப்பது எப்படி சரியாகும்.

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு சூழலில் வெவ்வேறு முடிவுகள் எடுக்க வேண்டிய சூழல் எழுவது இயற்கை. வேற்றுமைகளையும் மீறி நம் அனைவரையும் கட்டிப்போடும் சக்தி அன்புக்கு மட்டும்தான் உண்டு.

நீங்கள் ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருக்கும்போது ஏதோ ஒரு கருத்து வேறுபாடு எழலாம். வேறுபாடுகள் எழுவது எப்படி இயற்கையோ அதேபோல அதைப் பேசித் தீர்த்துக்கொள்ள நேரம் இருக்க வேண்டியதும் இயற்கை.

நம் குடும்பத்தினரால் நாம் காயப்படுத்தப்படும் போது, அதை மறப்பதற்கும், மன்னிப்பதற்கும் நாம் தயாராக இருப்போமேயானால் கடவுளின் அன்பை நாம் உணர முடியும்.

அன்பு செலுத்துவது எல்லா நேரங்களிலும் சாத்தியமான செயலல்ல... அதுவும் குடும்பத்தினரிடையே அன்பு எப்போதும் தொடரும் என்பது மிகவும் சிரமமான செயல்தான்.

ஆனாலும், இல்லத்தில் நாம் அன்பு செலுத்தி, நம் மீதும் அன்பு செலுத்தப்படுமானால், அந்த அன்பை சுற்றி உள்ளவர்கள் மீது நாம் செலுத்த ஏதுவான சூழல் உருவாகும்.

நம்மைக் காயப்படுத்துபவர்களை மன்னிப்பதும், நம்மை ஏமாற்றுபவர்களை மறப்பதும், நமக்கு துரோகம் இழைப்பவர்களை திருத்த முயற்சிப்பதும் அன்பு செலுத்துவதின் அடிப்படைத் தேவைகள் என்பதை நாம் புரிந்து கொண்டால் எங்கும் அன்பு நிறைந்து அமைதி பெருகி வாழ்க்கை வளமடையும்".

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர் வானுரையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

என்பது வள்ளுவர் வாக்கு.

இந்தக் குறளுக்கு விளக்கமாய் வாழ்ந்து, தனது வாழ்க்கையை மற்றவர்களுக்கு பாடமாக்கி சென்றுள்ளார் அன்னை. . . குறள் போல அவர் புகழும் என்றும் நிலைத்து வாழும்.