தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

அம்மா நீ இல்லாத இவ்வுலகில் .....

அம்மா உனக்கு உன் மடி என்ற
சிம்மாசனத்தின் மைந்தன் எழுதும் கடிதம் !
நீ சிந்திய வியர்வை துளிகள் மண்ணாகிபோனது - ஏனோ
இன்று என் வியர்வை சிந்தாமல் இருக்கவா !

உன் கடைசி மூச்சிக்காற்றில்
என்னை ஏன் கலக்க மறுத்தாய் -எனக்காக
இவ்வுலகில் வாழ்ந்தவள் நீ ஒருத்தி அம்மா !

உன் இரத்தத்தை எனக்கு கொடுத்து
பத்து மாதம் உயிராக சுமந்தாய் !
உன் பாதங்களில் முள் குத்தினாலும் - என்னை
உன் இடையில் அல்லவா சுமந்தாய் - ஏனோ
இன்றோ பயம் என்னை சுமக்கிறது .....

அம்மா நீ இல்லாத இவ்வுலகில்
எங்கும் எனக்குள் ஒரு தனிமை !
என்னையே என்னால் உணரமுடியவில்லை - ஏனோ
என்னுள் நான் உன்னை உணர்ந்ததாலோ!

அம்மா என்ற ஒரு சொல்லில் முடிந்தவளே,
என் அத்தனை சொற்களுக்கும் நீயே உயிர் மூச்சு !
யாரோ அம்மா என்று கூறும் ஒரு வார்த்தையை
என் செவிகள் கேட்க்கும் பொழுது - ஏனோ
எனக்குள் நீ சிரிக்கிறாயம்மா !

நீ துடைத்து ஏறிந்தது என் வறுமை என்றாலும்
நீ இல்லாத என் வாழ்வில் என்றும் வெறுமை !
உன் மரணநாட்களில் நீ உணர்ந்த வலியை - ஏனோ
என் ஆயுள் முழுவதும் கொடுத்தாயம்மா !

நீ உனக்காக வாழ்ந்த நாட்களை விட
எனக்காக நீ உழைத்த நாட்கள் அதிகம்!
இதோ வாழ பயணிக்கிறேனம்மா ,
உனது கனவுகளை எனது இலட்சியமாக திரையிட !

என் ஆசைகள் அனைத்தையும் நிறைவேற்றினாய்
ஆனால் என் கடைசி ஆசையை மட்டும் - ஏனோ
புரிந்து கொள்ளாமல் போனாயம்மா !
ஆமாமம்மா .... என் மரணப்படுக்கையின் தலையணை
உன் மடி என்று நினைத்தது தவறா !

என் அத்தனை எண்ணங்களுக்கும்
செயல் வடிவம் தந்தாயம்மா !
தினமும் நான் புரிந்துகொள்கிறேன் ,
கண்ணாடி முன் நான் நிற்கையில் ! என் உருவத்திற்கே
வடிவம் கொடுத்தவள் தானே நீ என்று !

அடுத்த ஜென்மம் என்பது மனித
சிந்தனைக்கு அப்பாற்பட்டது என்றாலும் !
எந்த ஜென்மத்தில் என்னை மகனாக சுமந்தாயோ
அதே ஜென்மத்தில் என் தோள் மீது ,
உன்னை என் மகளாக சுமப்பேன் !

எத்தனை இரவுகள் உண்ணாமல் படுத்தாய்
என் பசியைப் போக்க !
எத்தனை இழிவுகளை சுமந்தாய்
எனது லட்சியங்களை தீயாக மாற்ற !

எத்தனை நாட்கள் நடந்தாய் கால் வலிக்க
என் பிறப்பின் அர்த்தத்தை கூட்ட !
எத்தனைப் போராட்டமம்மா உனக்குள்
என்னை போராளியாக மாற்ற !

எத்தனை வலிகளம்மா உனக்குள்
என் வலிகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க !
எத்தனைக் கனவுகளம்மா உனக்குள்
என்னுள் சந்தோசத்தை மட்டுமே காண !

எத்தனைக் கண்ணீர் துளிகளை பரிசளித்தாய்
என்னை பக்குவப்பட்டவனாக மாற்ற !
எத்தனை எத்தனை சுமைகள் அம்மா உனக்குள்
என்னை நீ மகனாக சுமந்ததால் !

உன் மடியில் சாய்ந்து அழ துடிக்கிறேனம்மா
உன் தோளில் சாய்ந்து அழுவதற்கு முன் !

எனது வாழ்க்கைப் பயணத்தில்
எத்தனை நாட்கள் நான் தனிமையில் நடந்தாலும்
என் தனிமை சொல்லும் உன் மரணத்தின் வலியை !

உன் நினைவுகளை சுமந்த படி பயணிக்கிறேன் ,
எதற்கு ஏன் என்ற கேள்விக்கு முன்
பயணத்தின் இறுதியில் என் லட்சியம் சொல்லும்!
உந்தன் இழப்பையம்மா !

இப்படிக்கு
உன் மடி என்ற சிம்மாசனத்தின் மைந்தன்,