வானம் வசப்படுமே என்ற இந்தத் தொடரில் எந்த வரலாற்று மாந்தரை முதலில் அறிமுகம் செய்வது என்று நான் யோசித்த போது இந்த உலகிற்கு இன்று அதிகம் தேவைப்படுவது எது என்ற கேள்வி என்னுள் எழுந்தது. இரண்டு உலகப் போர்களைச் சந்தித்து விட்டோம். மூன்றாவது எப்போது வருமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்தத் தருணத்தில் நமக்கு அதிகம் தேவைப்படுவது பணமோ, தொழில்நுட்பமோ, ராணுவ பலமோ, விஞ்ஞான அதிசயமோ அல்ல. அன்பும், நேசமும், பாசமும், கருணையும்தான். அத்தனைக்கும் ஒட்டுமொத்த இலக்கணமாய் வாழ்ந்தவர் - இன்றும் கோடிக்கணக்கான உள்ளங்களில் வாழ்ந்து கொண்டிருப்பவர் அன்னை தெரேசா. ஆம் அன்போடு இந்தத் தொடரைத் தொடங்குவோம்.
1910ம் ஆண்டு ஆக்ஸ்ட் 27ம் தேதி யூகோஸ்லாவியாவில் Agnes Gonxha Bojaxhiu என்ற குழந்தை பிறந்தது. பிற்காலத்தில் அன்பின் முகவரியாக அந்தக் குழந்தை விளங்கும் என்பது அப்போது அதன் பெற்றோருக்குத் தெரியாது. ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தில் கன்னிகாஸ்த்திரியான பிறகு அவர் சகோதரி தெரேசா என்று பெயர் மாற்றிக் கொண்டார்.
1929ம் ஆண்டு ஐனவரி ஆறாம் தேதி தமது 19வது வயதில் கல்கத்தாவில் காலடி வைத்தார் அன்னை தெரேசா. அடுத்த 68 ஆண்டுகள் அந்த அன்னையின் கருணை மழையில் நனையும் பாக்கியத்தைப் பெற்றது இந்திய மண். சுமார் 17 ஆண்டுகள் Loretta கன்னிமார்கள் குழுவில் சேர்ந்து ஆசிரியராகப் பணியாற்றிய போது கல்கத்தாவின் நெருக்கமான தெருக்களில் மிக மோசமான நிலையில் வாழ்ந்தோரின் நிலையும் ஆதரவின்றி மாண்டோரின் அவலமும் அன்னையின் மனத்தைப் பிழிந்தன.
1946ம் ஆண்டு செப்டம்பர் 10ம் தேதி ஓய்வுக்காக இந்தியாவின் டார்ஜீலிங் நகருக்கு ரயில் பயணம் மேற்கொண்டிருந்த போதுதான் அவரது வாழ்க்கையையும் பல்லாயிரக்கணக்கான ஆதரவற்றோரின் வாழ்க்கையையும் மாற்றியமைக்கப் போகும் ஒரு தெய்வீக அழைப்பை அவர் உணர்ந்தார். நலிந்தோருக்கும் நோயாளிகளுக்கும் உதவ கடவுளிடமிருந்து வந்த அழைப்பாக அதனை ஏற்றுக் கொண்டு Loretta கன்னிமார்கள் குழுவிலிருந்து விலகினார்.
கல்கத்தாவின் மிக ஏழ்மையான சேரிகளுள் ஒன்றான மோட்டிஜில் சேரிக்கு 1948ம் ஆண்டு டிசம்பர் 21ம் நாள் வந்து சேர்ந்தார். அப்போது அவரிடம் இருந்ததெல்லாம் வெறும் ஐந்து ரூபாயும் மனம் நிறைய அன்பும்தான். கடுமையான வறுமையில் இருந்த அந்த ஏழைகள் மத்தியில் தமது அறப்பணியைத் தொடங்கிய அன்னை தெரேசா 1950ல் Missionaries of Charity என்ற அமைப்பை உருவாக்கினார்.
1952ல் Nirmal Hriday என்ற இல்லத்தைத் திறந்தார். அந்த இல்லம்தான் பல்லாயிரக்கணக்கானோருக்கு அவர்களின் கடைசிக் காலத்தில் கருணை இல்லமாகச் செயல்பட்டது. கல்கத்தாவின் தெருக்களிலிருந்து உயிர் ஊசலாடிய நிலையில் காப்பாற்றப்பட்ட சுமார் 42 000 ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் அந்த இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். சக மனிதர்களாலேயே புறக்கணிக்கப்பட்ட அந்த ஆத்மாக்களுக்கு அதீத அமைதியைத் தந்தது அன்னையின் இல்லம். சுமார் 19 000 பேர் ஆதரவின்றி மடிந்து போயிருப்பர். ஆனால் அந்த இல்லத்திற்குக் கொண்டு வரப்பட்ட அவர்கள் தங்கள் இறுதி நிமிடங்களில் அன்னையின் அரவணைப்பில் அன்பை உணர்ந்து மகிழ்ச்சியுடன் மரணத்தைத் தழுவினர்.
ஒருமுறை ஏழைகளுக்கு உதவ அன்னை தெரேசா ஒரு செல்வந்தரிடன் கையேந்தி நின்ற போது அந்த செல்வந்தர் அன்னையின் கைகளில் காரி உமிழ்ந்தார். அப்போது அன்னை என்ன சொன்னார் தெரியுமா? கைக்குள் விழுந்த எச்சிலைக் கைக்குள்ளேயே மூடிக் கொண்டு இந்த எச்சில் எனக்குப் போதும்; என் ஏழைகளுக்கு ஏதாவது கொடுங்கள் என்றார். திக்குமுக்காடிப் போன அந்த செல்வந்தர் அன்னையின் கால்களில் கதறியழுது வாரி வழங்கினார்.
1953ல் ஓர் அனாதை இல்லத்தையும் 1957ல் தொழுநோயாளிகளுக்கான இல்லத்தையும் தொடங்கி தமது பணியை அகலப்படுத்தினார் அன்னை தெரேசா.
பலர் அருவருத்து ஒதுங்கும் போது அன்னையும் அவரது சகோதரிகளும் தொழு நோயாளிகளின் ரணங்களுக்கும் உள்காயத்துக்கும் மருந்திட்டனர். அவர்களுக்கு அன்பு எனும் விருந்திட்டனர். ஆரம்பத்தில் 12 கன்னிமார்களுடன் தொடங்கிய அவருடைய Missionaries of Charity அமைப்பு தற்போது 500க்கும் மேற்பட்ட நிலையங்களாக விரிவடைந்து 132 நாடுகளில் இயங்கி வருகின்றன.
தனது பணிக்கு விளம்பரம் தேடாத அன்னை தெரேசாவை நோக்கி விருதுகளும் பட்டங்களும் படையெடுத்தன. 1979ல் அமைதிக்கான நோபல் பரிசு, 1980ல் இந்தியாவின் பாரத ரத்னா விருது, 1985ல் அமெரிக்க அதிபரின் சுதந்திரப் பதக்கம். 1962ல் அவருக்குக் குடியுரிமை வழங்கிக் கெளரவித்தது இந்தியா.
அன்பென்ற மழையில் இந்த அகிலத்தை நனைய வைத்த அந்த உன்னத அன்னையின் உயிர்மூச்சு 1997ம் ஆண்டு செப்டம்பர் ஐந்தாம் தேதி அவரது 87வது வயதில் நின்ற போது எதற்கும் கலங்காத கண்களும் கசிந்தன.
தாம் வாழ்ந்த போது அவரிடமிருந்த சொத்தெல்லாம் மூன்று வெள்ளைச் சேலைகளும் ஒரு சிலுவையும் ஒரு ஜெபமாலையும்தான். ஆனால் விலைமதிப்பற்ற அன்பை மட்டும் அவர் அமுத சுரபியாக அள்ளியள்ளி வழங்கினார். அதனால்தான் ஒரு கவிஞர் அவரை சாக்கடையோரச் சந்ததிக்கும் சாமரம் வீசிய பூமரம் என்று வருணித்தார். அன்பிற்கு அன்னை தெரேசா என்ற புதிய இலக்கணத்தை இன்று இவ்வுலகம் கற்றுக் கொண்டிருக்கிறது. அன்னை தெரேசா போன்றவர்களை எண்ணித்தான் நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்ற பாடலை ஔவையார் எழுதியிருக்க வேண்டும்.
நாம் அன்னை தெரேசா போல் வலிக்கும் வரை கொடுக்க வேண்டியதில்லை; நமது உயிரை உருக்கி ஏழைகளிடமும் ஆதரவற்றோரிடமும் அன்பு செலுத்த வேண்டியதில்லை. நமக்கு வேண்டியவர்களிடம் உண்மையான அன்பு செலுத்தினாலே போதும் அந்த வானம் வசப்படும்.