அவருக்கு ஒரு கனவு உண்டு. தனது பெரிய மகனை கலெக்டர் ஆக்க வேண்டும். இளைய மகனை போலிஸ் அதிகாரி ஆக்கவேண்டும். ஒரே வீட்டில் ஓர் ஐ.ஏ.எஸ், ஓர் ஐ.பி.எஸ். என்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?
முதல் கட்டமாக குழந்தைகளை படிக்கவைக்க வேண்டுமே? இரு குழந்தைகளுமே காண்வெண்டில் படிக்கிறார்கள். மாதாமாதம் பீஸ் கட்டவேண்டும். வருடத்துக்கு ஒருமுறை ஜூன்மாதத்தில் பெரிய செலவு இருக்கும். அப்போது வசந்தி தவித்துப் போய்விடுவார்.
தான் வேலை செய்யும் வீட்டு முதலாளிகளிடம் கடன் கேட்பார். தன்னுடைய சம்பளத்தில் மாதாமாதம் கழித்துக்கொள்ள சொல்வார். வருடத்துக்கு ஒருமுறை கல்யாணி வாங்கும் பணத்தை மாதாமாதம் கட்டிமுடிப்பதற்குள் அடுத்த ஜூன் வந்துவிடும். மீண்டும் கடன். கேட்டது கிடைக்காதபட்சத்தில் ஐந்து, பத்து வட்டிக்கு வெளியில்கூட பணம் வாங்க கல்யாணி அஞ்சுவதில்லை.
இது கல்யாணியின் கதை மட்டுமே அல்ல. கல்யாணிகளின் கதை. சென்னையில் வசிக்கும் ஏழை/நடுத்த குடும்பங்கள் ஒவ்வொன்றின் கதையும் இதுதான். பெயர்கள்தான் வேறு வேறு.
கல்வியின் அவசியத்தை இந்த தலைமுறை நன்கு உணர்ந்திருக்கிறது. எனவேதான் தனது அடுத்த தலைமுறைக்கு தலையை அடகுவைத்தாவது நல்ல கல்வியை வழங்கியாக வேண்டுமே என்று தன்னைத்தானே உடலாலும், மனதாலும் வருத்திக் கொள்கிறது.
ஏழைகளுக்கு கல்வி எட்டாக்கனியா என்ன?
அரசுப் பள்ளியிலோ, அருகிலிருக்கும் மாநகராட்சிப் பள்ளியிலோ ஏன் தன் குழந்தைகளை கல்யாணி சேர்க்கவில்லை?
“நானே கார்ப்பரேஷன் ஸ்கூல்லதான் படிச்சேன். என் புருஷனும் அங்குதான் படிச்சாரு. எங்க புள்ளைங்களாவது நல்ல ஸ்கூல்ல படிச்சு நல்ல நெலைமைக்கு வரணும்னு எங்களுக்கு ஆசை இருக்காதா? நல்லா கவனிச்சுப் பார்த்துட்டேன். நான் வேலை செய்யுற வீட்டுலே இருக்குற குழந்தைங்கள்லாம் காண்வெண்டுலேதான் படிக்குது. காண்வெண்டுலேதான் நல்ல படிப்பு கிடைக்குது” – கல்யாணி சொல்லக்கூடிய பதில் இதுதான்.
பலருக்கும் இருக்கும் மனத்தடை இதுதான். இது தவறென்றும் சொல்லிவிட முடியாது. அரசை நிர்வகிக்கும் அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை கல்யாணியும் பார்த்துக்கொண்டுதானே இருக்கிறார்?’
மாநகராட்சிப் பள்ளிகளில் ஒழுங்கு கிடையாது. தேவையான வசதிகள் கிடையாது. ஆசிரியர்கள் சரியாக கல்வி போதிக்க மாட்டார்கள். இங்கு படிப்பவர்கள் யாரும் பெரிய படிப்பு படிப்பதில்லை – இதெல்லாம் பொதுப்புத்தியாக நம் மக்கள் மனதில் ஆணியாய் அடித்து ஆழமாய் வேரூன்றப்பட்டிருக்கிறது.
ஆனால் நிலைமை அப்படியல்ல என்பதுதான் இன்றைய நிஜம். கடந்த சில ஆண்டுகளில் சென்னை மாநகராட்சியால் நடத்தப்படும் பள்ளிகளின் வசதிகளும், கல்வித்தரமும் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது. இன்றைய தேதியில் பிரபலமான தனியார் பள்ளிகளோடு ஒப்பிடுகையில் மாநகராட்சிப் பள்ளிகளில் ஏற்படுத்தப் பட்டிருக்கும் வசதிகள் குறிப்பிடத் தகுந்தவை.
சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை 40 ஆரம்பப் பள்ளிகளோடு 1912ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இன்று 30 மேல்நிலை, 37 உயர்நிலை, 99 நடுநிலை, 116 ஆரம்பப் பள்ளி, 30 மழலையர் பள்ளி, ஓர் உருது உயர்நிலை மற்றும் ஒரு தெலுங்கு உயர்நிலை பள்ளிகள் என்று விழுதுகளை விரிவாய் வேரூன்றியிருக்கிறது. 1,05,882 மாணவ மாணவியர் கல்வி பயிலுகிறார்கள். 4,062 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
4 சமுதாய கல்லூரிகள் நடத்துகிறார்கள். ஒரு தொழிற்பயிற்சி நிலையமும் (ஐ.டி.ஐ) உண்டு. மாநகராட்சிப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மட்டுமே இங்கே சேரமுடியும்.
சரி. கட்டணமெல்லாம் எப்படி?
அதிகபட்சமாக 12ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு கூட வருடத்துக்கு ரூ.148/- மட்டுமே செலவு ஆகும் என்பதை வைத்து மற்ற வகுப்புகளுக்கு ஆகும் கட்டணத்தை நீங்களே யூகித்துக் கொள்ளலாம். எட்டாம் வகுப்பு வரை முற்றிலும் இலவசக் கல்வியையே சென்னைப் பள்ளிகள் வழங்குகிறது. மிகக்குறைந்த கட்டணத்தில் ஸ்பெஷல் ட்யூஷனும் தேவைப்படும் மாணவர்களுக்கு நடத்தப்படுகிறது.
வேறென்ன வசதிகள்?
ஒன்று முதல் பண்ணிரெண்டு வகுப்பு வரை பாடப்புத்தகங்கள் முற்றிலும் இலவசம்.
மதிய உணவுத் திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக சீருடை மற்றும் நோட்டுப் புத்தகங்கள், புத்தகப்பை, காலணி.
எஸ்.சி./எஸ்.டி, பி.சி./எம்.பி.சி பிரிவுகளைச் சேர்ந்த மாணவ/மாணவிகளுக்கு 11 மற்றும் 12 வகுப்புகளில் உதவித்தொகை. இதே பிரிவைச் சேர்ந்த மாணவிகளுக்கு இலவச சைக்கிள்.
இலவச பஸ் பாஸ்.
ஓவியம், நுண்கலைத்திறன் மற்றும் யோகா பயிற்றுவிக்கப்படுகிறது.
தடகளம் மற்றும் இதரவிளையாட்டுகளில் சிறப்புப் பயிற்சி வழங்கப்படுகிறது.
கணினி வழிக்கல்வி உண்டு. மாணவர்களுக்கு இண்டர்நெட் பரிச்சயம் படிக்கும்போதே ஏற்படுகிறது.
ஆளுமைத்திறன் மற்றும் ஆங்கிலப் பயிற்சி.
ஆண்டுதோறும் மாணவர்களுக்கு பல் மற்றும் கண் பரிசோதனை நடத்தப்பட்டு, தேவைப்படும் மாணவர்களுக்கு இலவசமாகவே கண்ணாடியும் வழங்கப்படுகிறது.
முறையான கட்டிடம், விளையாட்டு மைதானம், தீயணைப்புச் சாதனங்கள், ஒலிபெருக்கி, கணினி, மின்சார மணி, நவீன இருக்கைகள், மாணவ மாணவியர்களுக்கு சாய்வு நாற்காலிகள் என்று அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் அனைத்துமே உண்டு.
இதுபோன்ற வசதிகளை ஆயிரங்களில் கட்டணம் வாங்கும் தனியார் பள்ளிகளால் கூட தங்கள் மாணவர்களுக்கு தரமுடியுமா என்பது சந்தேகமே.
சரி, கட்டணமும் குறைவு. நிறைய வசதிகள் இலவசம். கல்வித்தரம் எப்படி?
ஒட்டுமொத்தமாக இப்பள்ளிகளில் கடந்த ஆண்டு பிளஸ் டூவில் 83 சதவிகிதமும், 10ஆம் வகுப்பில் 82 சதவிகிதமும் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்.
இனியும் நாம் மாநகராட்சிப் பள்ளி என்றே சொல்லிக் கொண்டிருக்கத் தேவையில்லை. ஏப்ரல் 8 முதல் இவை ‘சென்னைப் பள்ளிகள்’ என்ற பெயரில் அழைக்கப்படும் என்று மேயர் மா.சுப்பிரமணியனால் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகளுக்கு கடுமையான போட்டியைத் தரும் வகையில் ஏப்ரல் முதல் தேதியிலிருந்தே மாணவர் சேர்க்கையை சுறுசுறுப்பாக மாநகராட்சி தொடங்கியிருக்கிறது.
இந்த ஆண்டிலிருந்து வரவேற்கத்தக்க சில மாற்றங்களை சென்னைப் பள்ளிகளில் நாம் காணலாம்.
மாணவ மாணவியருக்கு மட்டுமல்ல. எல்லாப் பள்ளிகளுக்கும் யூனிஃபார்ம் உண்டாம். அதாவது சென்னைப் பள்ளிகள் அனைத்துமே ஒரே மாதிரியான வண்ணத்தில் அலங்கரிக்கப்படுமாம்.
நூலகங்கள் நவீனப்படுத்தப்படும் என்று அறிவித்திருக்கிறார்கள். வாரத்துக்கு மூன்றுநாட்களாவது குறைந்தபட்சம் அரைமணி நேரம் மாணவர்கள் நூலகத்தில் செலவழிக்க நேரம் வழங்கப்படுமாம். இலக்கியங்களில் தொடங்கி காமிக்ஸ் வரை தங்கள் பள்ளி நூலகங்களில் கிடைக்கும் என்று உறுதிகூறுகிறார்கள் மாநகராட்சி கல்வித்துறை அதிகாரிகள். கோடை விடுமுறைகளில் ஒரு சிறப்பு நூலகத்தை ஒவ்வொரு பள்ளியிலும் நடத்தலாம் என்றும் ஒரு ‘நச்’ ஐடியா மாநகராட்சிக்கு உண்டு.
மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளுக்கு இணையாக இன்னும் சில வருடங்களில் இந்த சென்னைப் பள்ளிகளை தரமுயர்த்துவதே தங்களது குறிக்கோள் என்று மாநகராட்சி ஆணையர் ராஜேஷ் லக்கானி சொல்கிறார்.
12ஆம் வகுப்பு வரை தங்களிடம் படித்த மாணவ/மாணவியர் உயர்கல்வி கற்கவும் மாநகராட்சியே ஊக்கத்தொகையும் தருகிறது. மருத்துவம், பொறியியல் போன்ற படிப்பினை தேர்ந்தெடுப்பவர்களுக்கு ரூ.25000, செவிலியர் ஆசிரியர் போன்ற பயிற்சிகளை தேர்ந்தெடுப்பவர்களுக்கு ரூ.5000, டிப்ளமோ படிப்பவர்களுக்கு ரூ.3000 என்று ஊக்கத்தொகை கொடுத்து வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது மாநகராட்சி.
“எந்த மனத்தடையும் இன்றி குழந்தைகளை எங்கள் பள்ளிகளில் சேர்க்கலாம். கல்வித் தரத்திலும் வளர்ச்சிலும் தனியார் பள்ளிகளை விட சிறப்பாக எங்கள் பள்ளிகள் செயல்படுகின்றன. தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் கொடுத்துவிட்டு அவதிப்படும் பெற்றோர்களே, மாநகராட்சிப் பள்ளிகளுக்கு வாருங்கள்” என்று அழைப்பு விடுக்கிறார் சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன்.
கல்யாணிகள் இனி தங்கள் குழந்தைகளின் கல்வி பற்றி கவலைப்பட வேண்டியதில்லை அல்லவா?
(நன்றி : புதிய தலைமுறை)