தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

உலகின் கவனத்தை ஈர்த்த பிரித்தானியாவே! உன்னை போற்றுகின்றோம்!! வணங்குகின்றோம்!!!


உலகின் கண்களும் காதுகளும் கடந்த சில நாட்களாக பிரித்தானியா என்று அழைக்கப்படும் இங்கிலாந்து நாட்டை நோக்கியே இருந்து வருகின்றன. அதற்கு முக்கிய காரணமாக அமைந்தவர்கள் அங்கு புலம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர்கள்.

அதற்கு அடுத்த காரணிகளாக அமைந்தவை பிரிட்டன் அரசாங்கமும் அங்கிருந்து ஒளிபரப்பாகும் சனல்-4 தொலைக்காட்சிச் சேவையுமே ஆகும்.

ஈழத்தமிழர்கள் மீதான கொடிதான நாகரீகமற்ற யுத்தத்தை ஏவிவிட்டு லட்சக்கணக்கான பொது மக்களையும் போராளிகளையும் கொன்றழித்ததுடன், உலகெங்கும் இருந்து பெற்ற கபடத்தனமான உதவிகள் மூலம் சதி செய்து விடுதலைப் புலிகள் என்ற மாபெரும் விடுதலை இயக்கத்தை அழித்துவிட்ட மகிந்த ராஜபக்ச பிரித்தானியாவிற்கு விஜயம் செய்த அந்த விடயமே உலகை அந்த நாட்டின் பக்கம் திரும்பிப் பார்க்கச் செய்தது என்று கூறலாம்.

இலங்கைக்கு எதிராக மட்டுமல்ல அந்த நாட்டின் ஜனாபதியாக முடிசூட்டிக் கொண்டுள்ள மகிந்த ராஜபக்சவிற்கும் எதிராக உலகெங்கும் உள்ள மனிதநேயமிக்க அமைப்புக்களால் முன்வைக்கப்பட்டுள்ள போர்க்குற்றம் தொடர்பான மனுக்கள், ஐக்கிய நாடுகள் சபையின் விசேட நிபுணர்கள் குழுவால் எதிர்பார்க்கப்பட்டிருக்கும் இந்த நேரத்தில் மகிந்த பிரித்தானியாவிற்கு விஜயத்தை ஆரம்பித்தார்.

ஏற்கெனவே திட்டமிட்டது போல பிரித்தானியாவில் வாழும் தமிழர்கள் அங்கு இயங்கிவரும் பிரித்தானிய தமிழர் பேரவையினரால் வழிநடத்தப்பட்டு மகிந்தாவின் வருகை தொடர்பான தங்கள் ஆட்சேபனையைத் தெரிவித்து படுகொலை புரிந்த அந்த பாதகனை பிரித்தானியாவில் வைத்து கைது செய்யும்படி அந்த நாட்டு அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்தனர். அத்துடன் மகிந்த அந்த நாட்டுக்குள் பிரவேசிக்கும் போது அவரது வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் செய்யவுள்ளதைப்பற்றியும் அவர்கள் முன்னறிவித்தல் கொடுத்திருந்தார்கள்.

ஆனால் பிரித்தானியாவிற்கு பயணம் செய்தார் மகிந்த. யாருமே எதிர்பார்த்திருக்காத வகையில் விமான நிலையத்தில் கூடிய ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் மகிந்தவிற்கு எதிராக கோசங்களை எழுப்பிய வண்ணம் மிகவும் நிதானமாக தங்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதற்காக நமது பிரித்தானியா வாழ் புலம்பெயர் தமிழ் மக்களை உலகத் தமிழர்கள் பாராட்டுகின்றார்கள். பாராட்டுகள் அந்த மக்களுக்கு மட்டுமல்ல.

இன்னும் இருக்கின்றார்கள் இருவர் பாராட்டுக்கள் பெறுவதற்கு. முதலாமவர் பிரித்தானிய அரசாங்கம். இந்த அரசாங்கத்தை பாராட்டுவதற்கு காரணம். நியாமான போராட்டத்தை விமான நிலையத்தில் விருந்தினர் பகுதியில் நடத்துவதற்கு அனுமதியளித்த அந்த அரசாங்கத்தையும் அதனோடு இணைந்த பொலிஸ் திணைக்களம் போன்ற அரசாங்க நிறுவனங்களையும் நாம் பாராட்ட வேண்டும்.

அடுத்தவர் யாரென்றால், சனல் -4 என்ற ஆங்கில மொழி மூலமான துணிகரமான தொலைகாட்சிச் சேவை.. இந்தச் சேவையில் தான் கடந்த சில நாட்களாக இலங்கை அரசாங்கம் தனது காடைச்; சிப்பாய்கள் மூலம் கட்டவிழ்த்து விட்ட கொலைவெறி ஆட்டத்தையும் அதனோடு ஒத்த போர்க் குற்றங்களையும் மிகவும் தெளிவான முறையில் ஒளிபரப்பி வருகின்றமை நமது மக்களின் போராட்டத்திற்கு வலு சேர்ப்பதாக அமைந்து விட்டது. மேற்படி சனல்-4 தொலைக்காட்சிச் சேவை ஒளிபரப்பி வரும் கொடூரமான காட்சிகள் மூலம் உலகம் இலங்கை அரசின் கொடிதான போர்க்குற்றங்களை நேரடியாகக் காண்பது போன்ற ஒரு சாட்சியத்தைப் பெற்றுக் கொண்டது என்றே கூறவேண்டும்.

இவ்வாறு உலகத் தமிழர்களை மட்டுமல்ல, உலகெங்கும் வாழும் நியாயவிரும்பிகளை பிரித்தானிய இந்த வாரம் நன்கு கவர்ந்துள்ளது. அங்கு மகிந்தவிற்கு எதிரான மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் அனைத்தும் மிகவும் பலனளித்துள்ளன என்பதையே உலகம் பார்த்துக் கொண்டிருக்கின்றது. தனக்கு எதிரான பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுவதை அறிந்த மகிந்த இலங்கை தூதுவராலயத்துக்குள் தஞ்சம் புகுந்தார். அதனை அறிந்த பிரித்தானியாவின் தமிழ் இளையோர்கள் முதலாவதாக தூதுவராலயத்தை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தையும் முடக்கினார்கள். இலங்கை தூதுவராலயத்துக்கு உள்ளே சென்றவர்களையும் வெளியேறியவர்களையும் காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடனேயே அழைத்துச்சென்றனர் என்பதும் அங்கிருந்து கிடைத்த செய்தியாக அமைகின்றது.

பிரித்தானியாவில் மகிந்த மூக்குடைந்து போனது தொடர்பான தாக்கம் இலங்கையில் நன்கு பாதித்துள்ளது என்றே கூறவேண்டும். ஒக்ஸ்போர்ட் யூனியனில் மகிந்த ஆற்றவிருந்த உரை ரத்து செய்யப்பட்டது தொடர்பாக இலங்கையில் மிகுந்த கொந்தளிப்பு நிலை ஏற்பட்டுள்ளது. அங்கிருந்து செய்தியாளர்களுக்கு கருத்து வெளியிட்டு மகிந்த தனது உரை ரத்து செய்யப்பட்டது குறித்து தான் மிகுந்த கவலை அடைவதாகவும் ஆனாலும் வேறு ஒரு மேடையில் விரைவில் தனது எண்ணங்களை வெளியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார். இதை அவருக்கு ஏற்பட்ட தோல்வியாகவே நாம் கருதலாம்.

அடுத்தது பிரித்தானியாவில் தனக்கு ஏற்பட்ட தோல்வியை மறைக்கும் முகமாக பிரித்தானியாவில் முக்கிய பிரமுகர்களோடு சேர்ந்து புகைப்படங்களை எடுத்து தனது நாட்டு பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்துள்ளார் மகிந்த. இன்றைய நாள் தினசரிகளில் அந்த படங்கள் பிரசுரமாகியுள்ளன. பிரித்தானிய நாட்டு பாதுகாப்பு அமைச்சரோடு மகிந்த நின்று எடுத்த புகைப்படமே பெரிதாக அங்கு பிரசுரிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் மத்தியில் மகிந்த மீதான பரிதாபமான பார்வையே ஏற்பட்டுள்ளது.

மேலும் அண்மையில் தனது சொந்த அண்ணராம் மனோ கணேசனை தவிக்க விட்டுவிட்டு மகிந்தவின் அரசாங்கத்தோடு சேர்ந்து அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற நப்பாசையில் இணைந்து கொண்ட பிரபா கணேசன் இன்றைய பத்திரிகைகளுக்கு விடுத்துள்ள கண்டன அறிக்கையில் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஜனாபதிக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்கின்றார்கள் என்று "குறை" சொல்லியிருக்கின்றார். கேவலம் ஒரு பிரதி அமைச்சர் பதவியை எதிர்பாத்து கொடிதான போர்க்குற்றங்கள் செய்த மகிந்தவின் கால்களைப் பிடித்தபடி உள்ள பிரபா கணேசன் புலம் பெயர்ந்த தமிழர்களின் போராட்டங்களுக்கான காரணங்களை நன்கு அறிந்து கொண்டும் இவ்வாறு அறிக்கை விடுவது என்பது பிரித்தானியாவில் இடம்பெற்று வருகின்ற விடயங்கள் எந்தளவிற்கு இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்துகின்றன என்பதையே நன்கு தெளிவுபடுத்துகின்றன.

இவ்வாறு பார்க்கும்போது பிரித்தானியா என்ற அந்த உன்னத நாட்டையும் அதனோடு இணைந்த அனைவரையும் ஏனைய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமி;ழ் மக்களாகிய நாம் வாழ்த்த வேண்டும் வணங்கவேண்டும்.