தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

எரிதழல் கொண்டு வா !!

நாட்கள் வாரங்களாய்

மாதங்கள் வருடங்களாய்

கடந்து கொண்டு இருக்கிறது


அறிவியல் யுகத்தில்

மனிதனின் சாம்ராஜ்ஜியம்

கணினியும் செல்போனும்

சட்டைப் பையில் சங்கமிக்கின்றன

பெண்களை பற்றிய மதிப்பீடுகளோ

குப்பைத் தொட்டியில்


கணவன் சின்ன வீட்டிற்கு

சென்ற போது கண்டுகொள்ளாத

கண்ணகி

பரத்தையர் வீட்டிற்கு

கணவனைத் தூக்கி சென்ற

நளாயினி

நெருப்பில் குதித்து- கற்பை

நிலை நிறுத்திய சீதாப்பிராட்டி

இவர்கள் தான்

பெண் குலத்துக்கு தெய்வங்களாம்.

சீச்சீ....வெட்கக்கேடு


வாருங்கள் ஆண்களே

அன்பைப் பகிர்ந்து கொள்வோம்

புதியதோர் உலகம் செய்ய

இருவரும் இணைந்தே

செயல்படுவோம்

இதில் ஏது ஏற்றத்தாழ்வு?


எங்களை

அடுப்பங்கரைக்குள் அடைத்தீர்கள்

கல்வி மறுத்தீர்கள்

உங்கள் சதை வெறிக்கு

எங்களின் சதைகள்

தீனிகளாய் சிதிலமடைந்தது.

சப்பி போட்ட

மாங்கொட்டைகளாய் நாங்கள்

மழையில் நனைந்த கோழிகளாய்

ஒடுங்கிப் போனது

எங்கள் வாழ்வு.


அப்பாவாய், அண்ணனாய், தம்பியாய்,

கணவனாய், நண்பனாய்

எப்படி இருந்தாலும் - ஆண்களே

நீங்கள் மனிதனாய் இருந்தது எப்போது?


ஆபாச சுவரொட்டிகளில்

ஆடைகளற்ற அந்த பெண்ணை - உன்

தங்கையாய் நினைத்து பார்....

சினிமாவில் வரும்

அரைகுறை ஆடைப் பெண்கள்

உன் தாயாக இருந்தால்....

இப்படி ஒரு கற்பனை - உனக்கு

எப்போதும் வராது- ஏனெனில் நீ

மனிதனே கிடையாது.


கவிஞர்கள் கூட பெண்மையை

மென்மையாய் தான் காட்டினார்கள்

காரணம்,

அவர்களும் ஆண்களே...


நிலவாய், மலராய், கொடியாய்,

நதியாய், கசங்கும் பொருளாய்

காகிதப் பூவாய்....

வாழ்க்கை முழுக்க

வாடி வதங்கி

தலைவிதி இதுவென

தாழ்ந்து தாழ்ந்து

அடிமையில் உழலும்

அன்பு தோழி....


பொறுத்தது போதும்

பொங்கி எழு

புரட்சி ஒன்றே விடுதலையின்

திறவுகோல்

விதைகள் கூட

பூமியைப் பிளந்துக் கொண்டு தான்

முளைக்கிறது

சூரிய உதயம் கூட

இருளைக் கிழித்துக் கொண்டுதான்

பிரகாசிக்கிறது


ஆம்....

புரட்சி ஒன்றே விடுதலையின்

திறவுகோல்

பெண்ணடிமை தனத்திற்கு எதிராய்

சாதிய கொடுமைக்கு சாட்டையடியாய்

மூடபழக்கங்களை துரத்தும் மூர்க்கத்தோடு

முஷ்டியை உயர்த்து.


பெண்ணே! உன்னை

பேதை என்று அழைத்தவர்

கோட்டம் அடங்கிட

எரிதழல் கொண்டு வா!

ஏய்ப்பவர் கருத்தை

பொசுக்கிப் போடுவோம்

உடனே விழிப்பாய்.....


- தமிழ் மதி