தமிழா நாம் பள்ளனாய், பறையனாய், நாடானாய், தேவனாய், சன்னியாய், ராவுத்தனாய் , வன்னியனாய், பரவனாய், பிள்ளையாய், கவுண்டனாய், மள்ளனாய், குயவனாய்...... வாழ்ந்தது போதும். வா தமிழா தமிழனாய் வாழ்வோம்"

 

ஆண்கள் ஜாக்கிரதை




ஆண்கள் ஜாக்கிரதை






அது ஒரு யாகூ காலம். யாகூ மெசேஞ்சர் பலராலும் பரவலாக உபயோகப்படுத்தப்பட்ட நாட்கள் அவை. யாகூவில் நிறைய குழுக்கள் இருக்கும் ஏதேதோ டாப்பிக்கில். குரூப் சாட்டிங்கூட நடக்கும். மகா மொக்கையான வெட்டி அரட்டைகள்தான். எங்களுடைய ஆர்வமெல்லாம் அங்கே ஏதாவது ஃபிகர் மடியாதா.. நம்மையும் திரும்பிப் பார்த்திடாதா என்பதுதான்..

அதற்கேற்ப பல நண்பர்களும் சொல்லும் காமங்கலந்த அஜால்குஜால் கதைகள் ஏராளமாக எங்கள் நட்புவட்டத்திற்குள் சுற்றிக்கொண்டிருக்கும்.. மச்சான் அவன் ஏதோ ஒருபொண்ணை சாட்டிங்லயே புடிச்சி போன வாரம் மருதமலைக்கு கூட்டிட்டு போயி ஒரே ஜாலியாம், நேத்து ஒரு ஃபிகரு வெப்காமரால ஒரே நாக்ரதினா தீரனானா.. மச்சி பாரின்லருந்து ஒரு பொண்ணு கட்டிகிட்டா உங்களத்தான் மாமா கட்டிக்குவேனு ஒரே அடம் என்று இவர்கள் சொல்கிற கதைகள் எங்களை வெறியேற்றும்.

விடலைப்பையனான எனக்கு அந்தகதைகளே உணர்ச்சிகளை தூண்டுவதற்கு போதுமானதாக இருந்தன. இதற்காக கஷ்டப்பட்டு காசு சேர்த்து இன்டர்நெட் சென்டர் போய் கிடைக்கிற ஒருமணிநேரத்தில் எப்படியாவது ஒரு ஃபிகரை மடக்கிவிடவேண்டும் என்கிற வெறியோடு திரிந்த காலங்கள் உண்டு.

மெய்யுலகில்தான் எதுவுமே சிக்கவில்லை என்கிற பூர்வஜென்ம கர்மா.. மெய்நிகர்உலகிலும் தொடர்ந்தது. இவர்கள் சொல்லுகிற கதைகளெல்லாம் கட்டுக்கதைகளோ என நினைக்கவும் வைத்தது. இணையம் முழுக்க வெறும் ஆண்களே நிரம்பிவழிந்தனர். சரி பெண்பெயரில் சிலகாலம் நல்ல பிள்ளையாக உலவுவோம் என யாகூ மெசேஞ்சரில் ஒரு ஐடி உருவாக்கி சுற்றிக்கொண்டிருப்பேன். சில பெண்களோடு நல்ல பிள்ளையாக பேசுவேன்.. என்னுடைய கருமாந்திர கிரகம் அந்த ஐடியும் ஏதோ ஒரு பையனுடையதாக இருந்து தொலைக்கும்..

இது பல நாள் நீடித்த கதைதான். இருந்தாலும் அதில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. சில பையன்கள் அல்லது ஆண்கள், பெண் என்று நினைத்து என்னோடு பேச ஆரம்பித்த போதுதான்.. அட ஃபிகர் உஷார் பண்றதவிட இந்த கேம் நல்லாருக்கே என தோன்றியது. பேச ஆரம்பித்தேன். எத்தனை ஆண்கள்.. இந்த இணையவெளியில் ஏதாவது ஒரு பெண் கிடைக்கமாட்டாளா என்கிற வெறியோடு சுற்றித்திரிவதை உணர முடிந்தது.

உன் அட்ரஸ்குடுடா செல்லம்.. உனக்கு மொபைல் போன் வாங்கி அனுப்பறேன்.. பட்டுபுடவை வேணுமா.. அமெரிக்கன் சாக்லேட்ஸ் என்றெல்லாம் பேசுகிற ஆண்களும் உண்டு. அட்ரஸ் கொடுத்து ஆட்டையை போட்டவர்கள் கதைகளும் உண்டு. சிலர் மிகவும் மோசமானவர்கள்.. தன்னுடைய வெப்கேமராவை ஆன் செய்து ஏடாகூடமாக எதையாவது காட்டி கடுப்பேத்துவார்கள். அதையெல்லாம் பார்த்து தொலைக்க வேண்டிய கொடுமைகளும் அரங்கேறும். சிலர் பேங்க் அக்கவுன்ட் நம்பர் குடு எவ்ளோ பணம் வேணும்னாலும் போடறேன்.. ஆனா ஒரே ஒருமுறை என்னோட போன்ல பேசு போதும் என கெஞ்சுவதையும் பார்த்திருக்கிறேன்.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் யாகூ மெசேஞ்சர் பயன்படுத்துபவர்கள் மாறிவிட்டனர். ஆர்குட் கூட அழிந்துவிட்டது. ஃபேஸ்புக்கும் டுவிட்டரும் இணையத்தை தன் பிடியில் வைத்திருக்கின்றன. ஆனால் இன்னமும் ஒரே ஒரு பெண் கிடைக்கமாட்டாளா என்கிற ஏக்கத்தோடு.. இல்லை இல்லை... வெறியோடு அலைகிற ஆண்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இப்போதும் அது கணிசமாக அதிகரித்துக்கொண்டேதானிருக்கிறது.

சொல்லப்போனால் அப்போதிருந்த நிலையை காட்டிலும் இப்போது ஐடித்துறையின் வளர்ச்சியோ என்ன கருமாந்திரமோ முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காமவெறியோடு கையில் நிறைய பணத்தை வைத்துக்கொண்டும் அலைகின்றனர் இணைய ஆண்கள்! விடலைப்பையன்கள் கூட அறியாத வயசு புரியாத மனசு பரவாயில்லை.. விட்டுத்தொலைக்கலாம். ஆனால் திருமணமான ஆட்களும் வயசான பெரிசுகளும் கூட இதுமாதிரியான லீலைகளில் ஈடுபடுவது சமயத்தில் கடும் எரிச்சலை கிளப்பிவிடுகின்றன. இணையத்துக்கு வெளியே எவ்வளவு பெரிய உலகமிருக்கிறது. எத்தனை கோடி பெண்கள் இருக்கிறார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு முகந்தெரியாத மெய்நிகர் உலகத்தில் ஏதாவது சிக்குமா என நாக்கைத்தொங்கப்போட்டுக்கொண்டு அலைவதைப்பற்றி என்னதான் சொல்வது!

இதையே சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றுகிறவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருப்பது ஆரோக்யமானதா அல்லது ஆபத்தானதா என்று தெரியவில்லை. போலியான ஐடியை கிரியேட் செய்ய வேண்டியது. யாராவது ஏமாந்த சோனகிரி கிடைத்தால் ஆசைவார்த்தை பேசி மயக்க வேண்டியது.. ஓசியில் கிடைத்தால் யாருக்குத்தான் கசக்கும்! மிஸ்டர் சோனகிரியும் ஆசைவார்த்தைக்கு மறுவார்த்தைகளை கொட்டி வைப்பார். பிரபலமானவர்கள் என்றால் சாட் ஹிஸ்டரியை வெளியிட்டு அவருடைய கேரக்டரை டேமேஜ் செய்து அசிங்கப்படுத்தலாம். பிரபலமில்லாதவர் என்றால் காதல் மொழி பேசி.. செல்போனில் அழைத்து பேசி (இப்போதெல்லாம் கொரியன் மொபைலிருந்தால் எந்த குரலிலும் எதிர்முனையில் இருப்பவரிடம் பேசமுடியுமாம்).. எனக்கு கொண்டைல ஆப்பரேசன் தொண்டைல ஆப்பரேசன் என்று சொல்லி பணம் கறக்கலாம்.

ஃபேஸ்புக்கில் இதுமாதிரியான கதைகள் மெகாசீரியல்கள் போல தினமும் ஒன்று எப்போதும் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவன் என்னை கையபுடிச்சி இழுத்திட்டான்.. அவ என்னை ஏமாத்திட்டா.. காசு புடுங்கிட்டாங்க.. பிளாக்மெயில் பண்றாங்க, கொலைமுயற்சி என தொடர்கிறது இக்கதைகள். நேற்றும் கூட ஒரு பெண் ஆசைவார்த்தை பேசியே ஒருகோடி ரூபாய் வரை உஷார் பண்ணியதாக இணையதள செய்தியொன்று சொல்கிறது!

ஒருபக்கம் இந்த மோசடிபேர்வழிகளால் இணைய மன்மதன்களுக்கு ஆப்புவிழுந்தாலும்.. இன்னொரு பக்கம் என்னைப்போல உங்களைப்போல அப்பாவிகளும் இதனால் பாதிக்கப்படுகிற அபாயமுண்டு. என்னதான் நாம் ஏகப்பத்தினி விரதர்களாகவும் மகாத்மாக்களாகவும் இருந்தாலும் ஒரு பெண்ணே வலிய வந்து பேசினால் யாருக்குத்தான் சறுக்காது.. விசுவாமித்திரருக்கே சறுக்குச்சே? அதனால் இந்த இணையபெருவழியில் ஆண்கள் தங்களுடைய கற்பையும் பர்சையும் பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி சர்வ ஜாக்கிரதையாக இருப்பதுதான். யாரிடம் பேசுவதாக இருந்தாலும் ஒருதடவைக்கு நான்கு முறை சிந்தித்து செயல்படுவது அவசியம்.

பெண்களை பாதுகாக்க பல பாதுகாவலர் இணையத்தில் உலவுவதால், ஆண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கிறது. அவர்களுக்கான எச்சரிக்கை குரலாக பொதுநலன் கருதி இப்பதிவு இங்கே எழுதப்பட்டுள்ளது. ஏனென்றால் நாளைவரும் இணைய ஆடவர்சந்ததிகள் இதைபடித்து தெளிவாக நடந்துகொள்ள ஏதுவாக இருக்குமில்லையா?



ஜாலியன் வாலாபாக் படுகொலை - வெளிவராத உண்மைகள்

 

ஏப்பிரல் பல்வேறு எண்ணங்களை எதிரொலிக்கும் திங்களாகும். முதல் நாள் முட்டாள்களுக்கு உரியது என்பது இளைஞர்களின் விளையாட்டு. பார்ப்பனப் பஞ்சாங்கத்தில் மூழ்கியோர் 14ஆம் நாளைத் தமிழர் புத்தாண்டு என்று பிதற்றுவர். ஆனால் பகுத்தறிவாளர்களோ உலக மாக்கவி ஷேக்ஸ்பியரையும், புரட்சியாளர் அம்பேத்கரையும், புரட்சிக் கவிஞர் பாரதிதாசனையும் ஈன்ற திங்கள் என்று போற்றுவர். இந்தியத் துணைக்கண்டத்தின் விடுதலை வரலாற்றில் ஜாலியன் வாலாபாக் என்ற மானுடப் படுகொலையும், சோக நிகழ்வையும் இணைத்துக் கொண்டது ஏப்ரல் திங்கள். 1919இல் ஜாலியன் வாலாபாக் படுகொலை பல நினைவலை களை நம் நெஞ்சின் முன் நிறுத்துகிறது. இந்நிகழ்விற்கு முன்பும் பின்பும் நடந்த பல வரலாற்று படிப்பினைகளை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ளத் தூண்டுகிறது. 1918 முதல் உலகப் போர் முடிவுற்றது. இப்போரில் ஒரு கோடி மாந்தர்கள் மாண்டனர். 43 ஆயிரம் இந்தியப் படைவீரர்கள் உயிர் நீத்தனர். இந்நிகழ்வுகளுக்கு உள்ள தொடர்புதான் என்ன?

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி 1915இல் தென் ஆப்பிரிக் காவிலிருந்து இந்தியாவிற்கு வந்து காங்கிரசு இயக்கத்தில் இணைந்து அரசியலில் தடம் பதிக்கிறார். காந்திக்குப் பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன. அதேபோன்று பல்வேறு கருத்து வேறுபாடுகளும் அவரைச் சுற்றிச் சுழலுகின்றன. காங்கிரசு இயக்கத்தில் இணைந்தவுடன் முதல் உலகப் போரில் இங்கிலாந்திற்கு ஆதரவாக காந்தி செயல்படுகிறார். எல்லோரும் வியக்கும்வண்ணம் முதல் உலகப் போரில் இங்கிலாந்து படைக்கு ஆதரவு திரட்டுகிறார். போர்ப்படையில் இந்தியர்கள் சேர வேண்டும் என்று வலியுறுத்துகிறார். தொடர் பரப்புரையை மேற்கொள்கிறார். காந்தி, "ஒரு நல்ல நிலைக்கு வரவேண்டும் என்றால் நம்மை நாம் பாதுகாத்துக் கொள்கிற திறனைப் பெற்று அதனைப் பயன்படுத்த வேண்டும். பெரும் முனைப்போடு போர்ப் பயிற்சி பெற வேண்டுமென்றால், இராணுவத்தில் பதிவு செய்து கொள்வது நமது கடமையாகும். (To bring about such a state of things we should have the ability to defend ourselves, that is, the ability to bear arms and use them... If you want to learn the use of arms with greatest possible dispatch, it is our duty to enlist ourselves in the army) என்று முழங்குகிறார்.

காந்தியின் இங்கிலாந்து ஆதரவு நிலையும், பரப்புரை நோக்கமும் வெற்றி பெற்றதா? நடந்தேறிய அரசியல் நிகழ்வுகள் உண்மையைப் பதிக்கின்றன. காந்தியைப் பற்றியும் பல கருத்து வேறுபாடுகள் இன்றும் தொடர்கின்றன. ஆயுதம் கூடாது. வன்முறையை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அமைதி வழியே சிறந்தது என்று முழங்கிய காந்தி வன்முறையையே அடிப்படையாகக் கொண்ட போரில் இந்தியர் களைச் சேர வலியுறுத்தியது சரியானதா? முன்னுக்குப் பின் முரணாகத் தோன்றவில்லையா? என்று பலர் கேள்விக் கணைகளைத் தொடர்ந்தனர். அவர்களில் முதன்மை யானவர் காந்தியின் நெருங்கிய நண்பர் சார்லி ஆண்டருஸ், "நான் தனிப்பட்ட முறையில் அவருடைய இந்தச் செயலுக்கு ஒருபோதும் உடன்பட முடியவில்லை. மன வருத்தத்தோடு இந்தக் கருத்தில் நான் அவருடன் வேறுபடுகிறேன்" (Personally I have never been able to reconcile this with his one conduct in other respects, and it is one of the points where I have found myself in painful disagreement) என்று இந்நிகழ்வைச் சுட்டிக்காட்டிக் குறிப்பிட்டார். "போர்ப் படையில் சேர வேண்டும் என்று பரப்புரை செய்தது 'அகிம்சை' கொள்கைக்கு எதிரானது. கருத்து வேறுபாடுகளை உருவாக்கிய காந்தியின் இச்செயல் தொடர்ந்து பேசப்படுகிறது" என்று காந்தியின் தனிச்செயலர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் உலகப் போர் முடிவுற்றவுடன் வெள்ளை ஏகாதி பத்தியம் இந்தியத் தலைவர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை எல்லாம் மீறி இந்திய மக்கள் மீது அடக்குமுறையைத்தான் ஏவியது. பல கறுப்புச் சட்டங்களை நிறைவேற்றியது. போராளி களையும், பினாயக் சென் போன்ற மருத்துவர்களின் கருத்துரிமையையும் பறிக்கப் பயன்படுத்தப்படும் இன்றைய கறுப்புச் சட்டங்களுக்கு எல்லாம் தாயான ரௌலட் சட்டம் 1919ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. ஏப்ரல் 10ஆம் நாள், காங்கிரசு இயக்கத்தின் அன்றைய புகழ் பெற்ற தலைவர்களான டாக்டர் சத்யபால், டாக்டர் சைபுதின் கித்லூ ஆகியோர் கைது செய்யப்பட்டுக் கண் காணாத இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த அடக்குமுறையைக் கண்டிப்பதற் காகத்தான் ஏப்ரல் 13, 1919 அன்று ஜாலியன் வாலாபாக்கில் ஒரு பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பெண்களும், குழந்தைகளும், இளைஞர்களும் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்ட இக்கூட்டம் நான்கு பக்கமும் சுவர்களால் சூழப்பட்ட ஒரு பூங்காவில் அமைதியான முறையில் நடைபெற்றது. விடுதலை உணர்வினை அடக்க வேண்டும். மக்களை அச்சுறுத்த வேண்டும் என்ற ஆதிக்க வெறியோடு, கூடியிருந்த பொது மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்த ரெஜினால்ட் டயர் (General Reginald Dyer) என்ற இராணுவத் தளபதி ஆணையிட்டான். பூங்காவில் இருந்து மக்கள் தப்புவதற்கு இருந்தது ஒரே வழி. ஆனால் டயர் ஆணைப்படி 1600 துப்பாக்கி ரவைகள் 10 மணித்துளிகளில் மக்களைச் சுட்டுப் பொசுக்கின. துப்பாக்கியில் ஒரு ரவைகூட மிஞ்சவில்லையாம். இந்த வன்கொடுமையால் 1521 பேர் காயப்படுத்தப்பட்டனர். ஆயிரம் பேர் உயிர் நீத்தனர் என்று இந்திய தேசியக் காங்கிரசு கணக்கிட்டுக் கூறியது. ஆனால் வெள்ளையர் அரசோ 379 பேர்தான் இறந்தனர் என்று குறிப்பிட்டது.

பஞ்சாப் படுகொலை எதிர்பாராத தன்மையில் நடந்ததா? திட்டமிட்டுச் சதி செய்து நடந்ததா? என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஒன்றுமட்டும் உண்மை. இந்த பஞ்சாப் படுகொலைக்கு உத்தரவிட்டு மக்கள் மாண்டதை மகிழ்ச்சி யோடு வரவேற்றவன் அன்றைய பஞ்சாப் மாநில ஆளுநர் மைக்கேல் ஓ டுவையர் (Michael O'Dwyer). யார் அந்த ஓ டுவையர்? இந்தியாவின் உயர் அலுவலராக 1885இல் பணியில்சேர்ந்து பல மாகாணங்களின் வருவாய்த் துறையின் ஆணையராகப் பணிபுரிந்து பிறகு ஆளுநராகப் பதவி உயர்வு பெற்று பஞ்சாபில் பணியேற்றார். இந்தப் படுகொலை நடந்தேறியவுடன், ஆளுநர் ஓ டுவையர், "உங்களுடைய செயல் சரியானது. ஆளுநர் ஒப்புதல் அளிக்கிறார்" என்று தளபதி டயருக்கு அனுப்பிய தந்தியில் குறிப்பிட்டிருந்தான்.

இந்திய மக்கள் அனைவரும் கதறினர். கொதித்தனர். அறிஞர்கள், கவிஞர்கள் கண்டனக் கணைகளைக் குவித்தனர். காங்கிரசு இயக்கத்திற்கு மக்கள் ஆதரவு பன்மடங்கு பெருகியது. வலிமைமிக்க இயக்கமாக காங்கிரசு பொலிவு பெற்றது. வெள்ளை ஏகாதிபத்தியம் இதனைக் கண்டு அஞ்சியது. ஹண்டர் என்ற உயர் அலுவலர் தலைமையில் ஒரு குழு அமைத்து ஆய்வு செய்தது. ஏதுமறியா மக்களைத் தொடர்ந்து சுட்டது கொடுஞ்செயல் என்று இக்குழு தனது அறிக்கையில் கூறியது. ஆனால் வெள்ளை ஏகாதிபத்தியமோ டயரைப் பணியில் இருந்து விடுவித்து இங்கிலாந்திற்குத் திருப்பியனுப்பியது. இக்காலக் கட்டத்தில்தான் தந்தை பெரியார் காங்கிரசில் தன்னை இணைத்துக் கொண்டார். 'பஞ்சாப் துயரம்' என்று பொதுக் கூட்டத்தில் கூறி கண்டனங்களைத் தெரிவித்தார். வங்கக் கவிஞன் இரவீந்திரநாத் தாகூர், பஞ்சாபில் சட்டம் சாய்ந்தது, நீதி கொலைக்களத்திற்கு அனுப்பப்பட்டது என்று முழக்கமிட்டு, இங்கிலாந்து அரசின் உயர் விருதினைத் துறந்தார். போர்ச் செயலராகப் பணியாற்றிய வின்சென்ட் சர்ச்சில் நாடாளுமன்றத்தில் இது ஒரு அரக்கத்தனமான நடவடிக்கை. முன்பு எப்போதும் நடைபெறாத ஒரு தீயச் செயல், இங்கிலாந்து பேரரசிற்கு இது ஒரு தலைகுனிவு என்று தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.

இந்தப் பழிதீர்க்கும் செயலை மேற்கொண்ட கொடுங் கோலன் டயர், பாகிஸ்தான் நிலப்பகுதியில் உள்ள முரி என்ற ஊரில்தான் பிறந்தான். சிம்லாவில் தனது பள்ளிப் படிப்பைத் தொடர்ந்து, அயர்லாந்து சென்று கல்லூரிப் பட்டத்தைப் பெற்றான். பின்பு இராணுவத்தில் இணைந்தான். இந்தியத் துணைக்கண்ட மக்களை நன்கு அறிந்தவன். இருப்பினும், வெறிபிடித்த வெள்ளையனாகவே டயர் வளர்ந்தான், வாழ்ந் தான் என்பதை இந்தப் படுகொலை நிகழ்வுகள் அவனை அடையாளம் காட்டுகின்றன. ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு மறுநாள் ஏப்ரல் 14ஆம் நாள் உருது மொழியில் விடுத்த அறிக்கை அவனது ஆதிக்க வெறியை வெளிப்படுத்தியது. "மக்களே நான் ஒரு படைவீரன். நீங்கள் விரும்புவது போரா? அல்லது அமைதியா? நீங்கள் போரை விரும்பினால் நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம். அமைதியை விரும்பினால் என்னுடைய உத்தரவுக்குக் கீழ்ப்படியுங்கள். நான் இராணு வத்தைச் சேர்ந்தவன். எதையும் நேராகக் கூறுபவன். நான் 30 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றி இருக்கிறேன். இந்திய வீரர்களையும், சீக்கிய மக்களையும் நன்கு அறிவேன். கடையடைப்பை நிறுத்துங்கள். பிரிட்டிஷ் அரசின் ஆணைக்கு அடிபணியுங்கள். ஆங்கிலேயரைக் கொன்ற ஒரு கெட்ட செயலைச் செய்து இருக்கிறீர்கள். இதற்காகப் பழிதீர்க்க உங்கள் மீதும், உங்கள் குழந்தைகள் மீதும் தாக்குதல்கள் தொடரும்" என்று டயர் அறிவித்தான்.

மக்கள் மீது இதுபோன்று கொடுஞ்செயல்கள் நடந்தேறிய போதெல்லாம் மத குருமார்கள் எவ்வாறெல்லாம் ஆளும் வர்க்கத்திற்கு வெண்சாமரம் வீசினார்கள் என்று உலக வரலாற்றில் பல சான்றுகள் உள்ளன. சீக்கிய மதகுருக்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்லர் என்பதை இந்தக் கொலைகாரர்களைப் பாராட்டி, போற்றி பொற்கோயில் போட்ட தீர்மானம் சீக்கிய இளைஞர்களைக் கொதித்தெழச் செய்தது. மானுடத்திற்கும், சீக்கிய மார்க்கத்திற்கும் சிறப்பான பணியை டயரும் அவனது குழுவினரும் ஆற்றினர் என்று கூறி சரோபா என்ற மரியாதைக்குரிய விருதை இந்த கொடுங்கோலனுக்கு பொற்கோயிலின் பூசாரிகள் வழங்கினார்கள். இதன் விளைவு தான் மாணவர்களின் போராட்டம், மக்கள் போராட்டமாக மாறியது. மதம் என்னும் போர்வையில் ஊழலில் ஊறித் திளைத்த மகந்த் என்ற சீக்கிய பூசாரிகளின் பிடியில் இருந்து சீக்கிய கோயில்கள் விடுவிக்கப்பட்ட வரலாற்று நிகழ்வும் நடந்தேறியது. 1920லிருந்து சீக்கிய வழிபாட்டுத் தலங்களை சிரோன்மணி குருத்வாரா பிரபந்தக் குழு தான் மேலாண்மை செய்யும் முடிவு மேற்கொள்ளப்பட்டது.

டயர் இங்கிலாந்திற்கு திரும்பியதும், அவருக்கு அளிக்கப் பட்ட ஓய்வூதியம் கூட நிறுத்தப்படவில்லை. ஆதிக்க வெறியர்கள் ஒன்றுகூடினர். இங்கிலாந்து நாட்டின் காலை ஏடு Morning Post டயருக்குப் பாராட்டுகளையும், பொற்கிழியும் வழங்க நிதித் திரட்டியது. நன்கொடையாகப் பெற்ற தொகையில் 26000 பவுண்டுகளை அன்பளிப்பாக அளித்தது. இந்தப் பெருந்தொகையைப் பெற்ற டயர் சில மாதங்களிலே கடும் நோயுற்றான். மூளைப்பிளவு நோய் தாக்கியது. பேச்சிழந்து, செயலிழந்து, உயிரிழந்தான் டயர். ஆனால், பஞ்சாப் படுகொலைக்கு ஆணையிட்ட ஆளுநர் ஓ டுவையர், மறைந்த டயருக்கு லண்டன் மாநகரில் நினைவு மண்டபம் கட்ட வேண்டும் என்று நிதித் திரட்டினான்.

ஜாலியன் வாலாபாக் படுகொலையால் பாதிக்கப்பட்டோர் பலர். சிலர் கண்டனங்களை மட்டும் எழுப்பிய நேரத்தில், மிக உயர்ந்தப் பதவியான வைஸ்ராய் குழுவின் உறுப்பினர் பதவியை இழந்தார் சி. சங்கரன் நாயர். ஆனால் சங்கரன் நாயருக்கு அளிக்க வேண்டிய மரியாதையை நாடு அளிக்க வில்லை. காரணம், இடஒதுக்கீடு கொள்கை என்ற சமூகநீதியை உயர்த்திப் பிடித்தவர் சங்கரன் நாயர். திராவிடர்களின் தனித் தன்மைகளைப் பல கட்டுரைகளில் எதிரொலித்தவர். இந்திய தேசியக் காங்கிரசின் மாநாட்டிற்கு 1897இல் தலைமை யேற்றவர். சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக 1907இல் நியமிக்கப்பட்டவர். இவ்வாறு பல சிறப்புகளைப் பெற்றவரை நெஞ்சுரத்தோடு பாராட்டியவர் கவிஞர் பாரதி ஒருவரே. 1905ஆம் ஆண்டு இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக சங்கரன் நாயர் தெரிவித்த கருத்திற்குப் பல கண்டனங்கள் வந்தபோது, பாரதி, சங்கரன் நாயருக்கு ஆதரவாக இந்து நாளிதழில் ஒரு மடலைத் தீட்டினார். அம்மடலில் சமத்துவத் தையும், சமுதாயப் புரட்சியையும் வலியுறுத்திய சங்கரன் நாயரின் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்தார்.

தனி மனிதரான ஒரு மாநிலத்தின் துணை ஆளுநர் எதையும் செய்துவிடலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு பஞ்சாபில் நடந்த படுகொலை என்று தனது புகழ்மிக்க நூலான 'காந்தியும் குழப்பமும்' (Gandhi and Anarchy) என்ற நூலில் குறிப் பிட்டார். இந்த நூலைப் படித்த பிறகு ஆளுநர் ஓ டுவையர், சங்கரன் நாயருக்கு எதிராக ஒரு மான நட்ட வழக்கை இங்கிலாந்தில் தொடர்ந்தார். 12 உறுப்பினர்கள் கொண்ட தீர்ப்பாயம் இந்த வழக்கை விசாரித்தது. இந்தக் குழுவில் இடம்பெற்றிருந்த அரசியல் அறிஞர், பேராசிரியர் ஹெரால்டு லாஸ்கி ஒருவர்தான் சங்கரன் நாயருக்குத் தண்டனை வழங்கக் கூடாது என்று தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தார். இருப்பினும், திரு. சங்கரன் நாயருக்கு 500 பவுண்ட் (இங்கிலாந்து நாணய மதிப்பு) தண்டமும், வழக்குச் செலவிற்காக 20000 பவுண்டும் அரசிற்கு அளிக்க வேண்டும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. இங்கிலாந்து தீர்ப்பாயம் சங்கரன் நாயருக்கு எதிராக வழங்கிய தீர்ப்பைக் கண்டு பலர் கண்டனங் களைத் தெரிவித்தனர். இங்கிலாந்தில் அக்காலக்கட்டத்தில் தலைமறைவாக இருந்த மாவீரர் உதம் சிங் இச்செயலைக் கண்டு மனம் கொதித்தார். சங்கரன் மறைந்து 6 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாப் படுகொலைக்கு உறுதுணை புரிந்த ஓ டுவையரைப் பழிதீர்க்க வேண்டும் என்ற நோக்கத் தோடு 21 ஆண்டுகள் லண்டன் மாநகரில் போராட்ட வாழ்க்கையை மேற்கொண்ட உதம் சிங் எதிர்பார்த்த நல்ல வாய்ப்பு கிட்டியது. ஜாலியன் வாலாபாக் படுகொலையின் போது துப்பாக்கிச் சூட்டில் காயம்பட்ட உதம் சிங்கின் காயம் ஆறியது என்றாலும் உதம் சிங்கின் நெஞ்சில் பதிந்த வடு மட்டும் மாறவில்லை.

1940ஆம் ஆண்டில் இங்கிலாந்து நாட்டின் காக்ஸ்டன் மண்டபத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்ள வருகை புரிந்தான் ஓ டுவையர். போராளியாகத் துப்பாக்கி ஏந்தினார் உதம் சிங், நேருக்கு நேர் அக்கொடுங்கோலனைச் சுட்டுக் கொன்றார். "நான்தான் இந்தக் கொலையைச் செய்தேன். இவர்தான் உண்மையான குற்றவாளி. இந்தத் தண்டனை தான் இவருக்குத் தகுதியானது. என்னுடைய மக்களின் உணர்வை நசுக்கியழித்தவரை நான் நசுக்கிவிட்டேன். 21 ஆண்டுகள் பழி தீர்ப்பதற்காகக் காத்திருந்தேன். நான் என்னுடைய கடமையை முடித்துவிட்டேன் என்று மகிழ்ச்சிய டைகிறேன். நான் இறப்பதற்கு அஞ்சவில்லை. என்னுடைய மக்கள் இங்கிலாந்து கொடுங்கோல் ஆட்சியின் கீழ் பசியால் வாடுவதைக் கண்ணுற்றேன். அதற்கு எதிர்ப்புத் தெரிவித் தேன். இது என் கடமை. நான் தாய்நாட்டிற்காக இறக்கும் இந்தச் செயலைவிட ஒரு பெரும் புகழ் எனக்கு என்ன கிடைக்கப் போகிறது" என்று மாவீரர் உதம் சிங் நீதிமன்றத்தில் வீர முழக்கமிட்டார். 1940ஆம் ஆண்டு ஜூலை 30 அன்று இங்கிலாந்து அரசு உதம் சிங்கைத் தூக்கிலிட்டது.

மகாத்மா காந்தி இரண்டு வரிகள் அடங்கிய ஒரு அறிக்கையை வெளியிட்டார். "உதம் சிங் செய்தது அறிவற்ற செயல், ஆனால் வீரமிக்கது". இந்த அறிக்கையில் காணப்படுகிற சொற்றொடர் கள் இன்றும் பல உண்மைகளுக்குச் சான்று பகிர்கின்றன. பஞ்சாப் படுகொலையைக் கண்டித்ததற்காக பெரும் தொகை யைத் தண்டமாகச் செலுத்தவும் சங்கரன் நாயர் அஞ்ச வில்லை. தண்டனையை ஏற்கவும் தயங்கவில்லை. காந்தியாரோ, மாவீரன் பகத் சிங் தூக்கிலிடப்பட்ட போதும் கலங்கவில்லை. கண்டனமும் தெரிவிக்கவில்லை. ஆனால் மாவீரன் உதம் சிங்கிற்குக் காந்தியார் அளித்தது பாராட்டுத்தானா என்றும் புரியவில்லை. உதம் சிங்கின் செயல் அறிவற்றது என்கிறார். ஆனால் வீரத்திற்கும் அறிவிற்கும் நெருங்கியத் தொடர்பு உள்ளது. அறிவாற்றலால்தான் பல வீரர்கள் உலகை வென்றிருக்கிறார்கள் என்று வரலாறு சுட்டுகிறது. அடக்கு முறையை எதிர்ப்பதற்கும் அறிவுதான் தூண்டுகோலாக இருக்கிறது. அறிவின் ஒரு வெளிப்பாடுதான் வீரம். இது போன்ற காரணங்களுக்காகத்தான் சங்கரன் நாயர், காந்தியும், குழப்பமும் என்ற நூலை எழுதினாரோ என்னவோ தெரிய வில்லை. ஒன்றுமட்டும் நன்றாகப் புரிகிறது. ஜாலியன் வாலாபாக் படுகொலை பல உண்மைகளை உலகிற்கு அறிவிக்கிறது. மறைக்கப்பட்ட இந்த உண்மைகளை ஏப்பிரல் திங்களிலாவது நினைவுகூர வேண்டாமா?

(சிந்தனையாளன் மே 2011 இதழில் வெளியானது)